Regional02

பள்ளிகளில் உளவியல் ஆலோசகரை நியமிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் :

செய்திப்பிரிவு

பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆண், பெண் சமத்துவத்துக்கான ஒருங்கிணைப்பாளர்கள் அ.முத்துலட்சுமி, பா.மகபூநிஷா, திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலியல் ரீதியாக துன்புறுத்தப் படும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் இதுதொடர்பான உளவியல் ரீதியான மன அழுத்தம் இருக்கும் என உளவியல் மருத்துவர்கள் கூறுவதை, தமிழக அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் இருந்து பாலியல் வன்முறைகளை முற்றாக துடைத்தெறிய ஒருங்கிணைந்த நடவடிக்கை முறைமை அவசியம்.

ஆசிரியர்களுக்கு இதுதொடர் பான வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இந்த குற்றங்களின் தன்மை, அது பாதிக்கும் விதம், தண்டனைகள், சமூகப் பொறுப்பு ஆகியவை பயிற்றுவிக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற நடத்தை விதிகளை தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.

பள்ளி வகுப்பு பாடத்திட்டத்தில் பாலின சமத்துவக் கல்வியை இணைக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாக புகார் பெட்டி வைக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் ஆலோசகரை நிய மிப்பது அவசியம் என தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT