தூத்துக்குடி: தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டயபுரம் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த காளியப்பன் (25), ராஜகோபால் நகரைச் சேர்ந்த மாரித்தங்கம் (20), அண்ணாநகரைச் சேர்ந்த நாராயணன் என்ற லட்சுமி நாராயணன் (21) என்பதும், எட்டயபுரம் சாலையில் சென்ற ஒருவரை வழிமறித்து, செல்போனை அவர்கள் வழிப்பறி செய்திருந்ததும் தெரியவந்தது. மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 4 அரிவாள்கள், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதில் காளியப்பன் மீது கொலை உள்ளிட்ட 19 வழக்குகளும், மாரித்தங்கம் மீது 3 வழக்குகளும், நாராயணன் மீது 2 வழக்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இது தொடர்பாக சிப்காட் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.