நாட்றாம்பள்ளி: நாட்றாம்பள்ளி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (27). இவரும், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (29) என்பவரும் இரு சக்கர வாகனத்தில் பெங்களூருவுக்கு நேற்று காலை சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். முத்துக்குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாட்றாம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.