TNadu

தமிழகத்துக்கு தடுப்பூசி விநியோகிக்க மறுடெண்டர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகையில், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 142 இடங்களில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, விருதுநகர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதிகளை அதிகரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவத் துறையினர் இணைந்து பணியிடங்களை நிரப்பிக் கொள்ள முதல்வர்மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு 30 மருத்துவர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்றுவரை 13 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 40 செவிலியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அவர்களே தடுப்பூசியை வாங்கிக் கொள்ள உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு, நேற்றோடு காலக்கெடு நிறைவு பெற்றது. இதில் யாரும் பங்கேற்காததால், மறுடெண்டர் அறிவிக்கப்பட்டு, தடுப்பூசியை நாமே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்கிறோம். நாள்தோறும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தரவேண்டும் என தொழில்துறை அமைச்சர், டெல்லியில் தொடர்புடைய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். காலஅவகாசம் கேட்டுள்ளனர். இதற்கிடையே பயோ-டெக் நிறுவனத்தினரும் ஆய்வு செய்துள்ளனர். எனவே, இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

SCROLL FOR NEXT