உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புஷ்பலதா கல்விக் குழுமம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இணையம் வழியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 40 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு 4 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பத்மவிபூஷன் விருது பெற்ற சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்தார்.
இணையம் வழியாக கலந்து கொண்டு அவர் பேசும்போது, “நாம் நெகிழி பயன்பாட்டை குறைத்தால்தான் கடல் மாசை தடுக்க முடியும். காடு அழிப்பை தடுக்க நிறைய மரம் வளர்க்க வேண்டும். பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள கரோனா வைரஸ் காலமும் விரைவில் நம்மை கடந்து போகும்” என்றார்.
முதல் பரிசாக ஸ்மார்ட் டேப்லெட், இரண்டாவது பரிசாக அமேசான் கிண்டில் ரீடர், மூன்றாவது பரிசாக கிராபிக் டேப்லெட் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஆழ்கடல் ஆய்வாளர் அபிஷேக் சுகுமாரன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணையவழியில் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.