தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
யூரியா உரம் பெரும்பாலான பயிர்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது. தற்போது குருணை வடிவிலான யூரியா உரம் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இப்கோ நிறுவனம் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரவ வடிவில் யூரியா உரத்தை உற்பத்தி செய்துள்ளது. நானோ யூரியா உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு நானோ மீட்டர் என்பது 100 கோடியில் ஒரு பங்கு ஆகும். நானோ துகள்களின் பரப்பளவு, சாதாரண துகள்களை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரவ யூரியா உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பயிர் முளைத்த பிறகு 30-வது நாளில் முதல் தெளிப்பும், பூக்கள் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அல்லது முதல் தெளிப்புக்கு பிறகு 2- 3 வார இடைவெளியில் 2-வது தெளிப்பும் மேற்கொள்ளலாம். 500 மில்லி திரவ யூரியா உரம், 45 கிலோ எடை உள்ள குருணை வடிவிலான யூரியா உரத்துக்கு ஒப்பாகும். மேலும் திரவ யூரியா பயன்பாட்டால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பயிர்களுக்கு உரிய தழைச்சத்து கிடைக்கிறது. திரவ யூரியாவை உற்பத்தி செய்யப்பட்ட நாளில் இருந்து 2 வருடங்கள் வரை பயன்படுத்தலாம்.
நானோ யூரியா 8 சதவீதம் பயிர் மகசூலை அதிகரிக்கும். இதனை உபயோகிப்பதால், குருணை யூரியா தேவையை 50 சதவீதம் வரை குறைக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 4 மில்லி அளவில் திரவ யூரியாவை கலந்து இலைகள் நனையும்படி தெளிக்க வேண்டும். இது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு நச்சு தன்மையற்றது, பாதுகாப்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.