ஈரோடு அகத்தியர் வீதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லை எனக் கூறியதால் ஏமாற்றமடைந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
Regional01

ஈரோட்டில் முதல் தவணை தடுப்பூசி இல்லை என்றதால் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லை என மருத்துவப் பணியாளர்கள் கூறியதால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. எனினும், 500-க்கும் அதிகமான மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன் கூடி விடுகின்றனர். இதனால் 100 பேருக்கு மேல் டோக்கன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் ஈரோடு அகத்தியர் வீதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். தடுப்பூசி போடுவதற்காக டோக்கன் வாங்க வரிசையில் காத்து நின்றனர். அப்போது கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி மட்டுமே போடப்படும் என மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதில் ஆத்திரமடைந்த மக்கள் மருத்துவப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சூரம்பட்டி காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். மேலும், முதல் தவணை தடுப்பூசி போடுவது குறித்த விவரம் தெரிவிக்கப்படும், அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதையேற்று மக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT