சிங்காரப்பேட்டை அருகே மனைவி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப் பேட்டை அருகே உள்ள மல்லிப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அமுல்ராஜ் (31). இவரது மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் 2 பேரும், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. இந்நிலையில், ரஞ்சிதாவிற்கும், மல்லிப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அமுல்ராஜ் கண்டித்துள்ளார். ஆனாலும் சந்திப்பு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த அமுல்ராஜ், மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். சிங்காரப்பேட்டை போலீஸார் ரஞ்சிதாவின் உடலை மீட்டு, அமுல்ராஜை கைது செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.