தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி தலா ரூ.1 லட்சத்தை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழகஅரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது.
இதன் அடிப்படையில் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த நபரின் 72 வயது தாயாருக்கு ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, நேற்று தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை மக்களவை உறுப்பினர் கனிமொழி வழங்கினார். அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு சித்த மருந்து மூலிகை பெட்டகங்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். பொதுமக்களுக்கு மூலிகை பெட்டகங்கள் விற்பனை செய்யும் பணியையும் தொடங்கி வைத்தார்.
கி.ரா.வுக்கு சிலை
கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வெங்கடேஸ் நகரில்உள்ள நகராட்சிக்கு சொந்தமான அறிவியல் பூங்கா, பிரதான சாலையில் உள்ள ராமசாமி தாஸ் பூங்கா, இனாம் மணியாச்சி சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையத்தின் முன் பகுதி ஆகிய இடங்களை சிலை அமைப்பதற்காக ஆய்வு செய்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவில்பட்டி கோவிட் கேர் சென்டரில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கான காரணங்களை கண் டறிந்து,அதனை தடுப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசு செய்ய வேண்டும். ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வருவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பொது விநியோக திட்டம் திருப்திகரமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தட்டுப்பாடின்றி தடுப் பூசிகளை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.