மாத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டு, கடந்த 7 மாதங்களாக மூடியேக் கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் மாத்தூரில் கடந்த நிதியாண்டில் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் இந்த நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாத்தூர் பொதுமக்கள் கூறியது: மாத்தூரில் 10,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால் விலை கொடுத்து குடிநீர் வாங்கிக் குடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இங்கு ஏற்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு பல முறை ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி செயலாளர் அருணாசலம் கூறியபோது, “கடந்த ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மூலம் திறப்பதாக இருந்தது. ஆனால், கடைசி வரை திறக்க முடியாமல் போய்விட்டது. இதை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.