தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்ட நிர்வாக இயக்குநருக்கு திருநெல்வேலி மாவட்ட கட்ட பொம்மன் போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ராதாகி ருஷ்ணன் அனுப்பியுள்ள மனு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக திருநெல்வேலி கோட்டத்தில் திருநெல்வேலி, நாகர் கோவில், தூத்துக்குடி மண்டலங்கள் உள்ளன. கடந்த மே 1-ம் தேதி தேசிய விடுமுறை தினத்தில் இந்த மண்டலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 1958 பண்டிகை விடுமுறை சட்டத்தின்படியும், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961 விதிகள் 62, விதி 32-ன்படியும் இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. இது சட்ட விதிமீறலாகும்.
கடந்த காலங்களில் பண்டிகை, தேசிய விடுமுறை தினங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 1-ம் தேதி பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மற்ற போக்குவரத்து கோட்டங்களில் இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி கோட்டத்தில் வழங்கப்படவில்லை. இரட்டிப்பு ஊதியம் அல்லது ஈடுகட்டும் விடுப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.