தென்மேற்கு பருவமழைக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க, தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து அனைத்து துறை அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. ஆட்சியர் பேசியதாவது:
மழை மற்றும் இயற்கை இன்னல்கள் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக வட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சார் ஆட்சியர்கள் தலைமையில் மண்டல குழுக்கள், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேரிடர் சமயங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முழுவதுமாக பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழை நீர் வழித்தடங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் தங்கு தடையின்றி செல்வதற்கான வழிவகை செய்ய வேண்டும். மழை நீரினை முடிந்த அளவு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சேமிப்பதற்கு தன்னார் வலர்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கனரக இயந்திரங்கள், மரம்வெட்டும் கருவிகள், நீர் வெளியேற்றும் மோட்டார் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரம், மருந்து போன்றவற்றை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் .
சுத்தமான குடிநீர் அனை வருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலவேம்பு, கபசுர குடிநீர் போன்றவற்றை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள், மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமண மண்டப உரிமையாளர்களுக்கு
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அறிக்கை:
திருநெல்வேலி மாவட் டத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலைய ங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல் படும் திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் திருமண ஏற்பாட்டாளர்கள் மீது காவல் துறையினர் மூலம் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, கரோனா பரவலை தடுப்பது தொடர்பான அரசின் முழு ஊரடங்கு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து திருமண மண்டப உரிமையாளர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.