தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி பழுதானதால் கரோனா தொற்றாளர்களுக்கு நோயின் தீவிரத்தை துல்லியமாக கண்டறிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மட்டும் 358 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம்419 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் கருவியில் பழுது ஏற்பட்டதால் கடந்த 4 நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு கரோனாவின் தாக்கத்தை துல்லியமாக கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மேலும், விபத்தில் படுகாய மடைந்து சிகிச்சை பெற வருபவர்களுக்கு காயத்தின் தன்மை குறித்து அறிய முடியவில்லை.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்துகூறும்போது, ‘‘அரசு மருத்துவமனையில் கடந்த ஒருவார காலமாக சி.டி.ஸ்கேன் கருவி செயல்படாத நிலை உள்ளது. அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பழுதை உடனடியாக சரி செய்வதுடன், மருத்துவமனையில் கூடுதலாக சி.டி. ஸ்கேன் பரிசோதனை மையத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்’’ என்றார்.
இதுகுறித்து தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தினரிடம் கேட்டபோது, ‘சி.டி. ஸ்கேன் கருவியை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று செயல்பாட் டுக்கு வந்து விடும்’’ என தெரி வித்தனர்.