தூத்துக்குடி அருகேயுள்ள ராஜபாளையம் கடற்கரை பகுதியில் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கடலோர கிராமம் ராஜபாளையம். இந்த கிராமத்தில் சுமார் 2,000 பேர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்த ஊருக்கு அருகே கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில் கடற்கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சாலையோரத்தில் மாப்பிளையூரணி ஊராட்சி பணியாளர்கள் குப்பைகளை வண்டிகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். சாக்கடை கழிவுகள், தெரு குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி வருவதால் அந்த இடமே குப்பை மேடாக மாறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக ராஜபாளை யத்தைச் சேர்ந்த ஜே.மைக்கிள் என்பவர் கூறும்போது, “ குப்பைகளை கொட்டுவதால் எங்கள் ஊரின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. கழிவுகளை அழிப்பதற்காக தீ வைக்கப்படுவதால், காற்றுமாசடைந்து மக்களின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கிறது. எங்கள் ஊர் கடற்கரை பகுதியானது பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பகுதியாகும். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் கழிவுகளை கொட்டுவது வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.