National

5ஜி அலைவரிசைக்கு எதிராக வழக்கு ஜூகி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் :

செய்திப்பிரிவு

இந்தியாவில் தற்போது 4ஜி அலைவரிசையில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அதிவேகம் கொண்ட 5ஜி அலைவரிசையை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

5ஜி அலைவரிசையை இந்தியா வில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எனவே, இந்த அலைவரிசைக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா, விரிஷ் மாலிக், டீனா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவானது, நீதிபதி ஜே.ஆர்.மிதா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காணொலி மூலமாக நடைபெற்ற விசாரணையின் போது, ஜூகி சாவ்லா உள்ளிட்ட மனுதாரர்கள் மட்டுமின்றி 5-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் ஆன்லைனில் இருந்த னர். விசாரணை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரசிகர் ஒருவர் ஜூகி சாவ்லா நடித்த பழைய படத்தில் இடம்பெற்ற பாடலை பாடினார்.

அப்போது தலையிட்ட நீதிபதி, அமைதியாக இருக்குமாறு எச்சரித்தார். இதையடுத்து அந்தக் குறிப்பிட்ட நபர் காணொலிக் காட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக மற்றொரு ரசிகரும் ஜூகி சாவ்லாவின் பாடலை பாடினார்.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, “இந்த மனு முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரர் களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. விசாரணையின் போது பாடல் பாடிய நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என உத்தரவிட்டார். அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, காணொலிக் காட்சி விசாரணைக்காக நீதிமன்றம் தனக்கு அனுப்பியிருந்த ஆன்லைன் லிங்க்-ஐ ஜூகி சாவ்லா ட்விட்டரில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT