ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 9400 தடுப்பூசிகளும், 18 முதல் 44 வயதினருக்கு 30 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
கரோனா பரவலைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு தடுப்பூசி மருந்தினை வழங்குகிறது. 18 முதல் 45 வயதினருக்கு மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில் தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி வரை 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு 41 ஆயிரத்து 677 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது. இதன்படி மொத்தம் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 732 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது 44 வயதுக்கு மேற்பட்டோருக்கு 9400 தடுப்பூசி இருப்பில் உள்ளது. 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு 30 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. அடுத்தகட்டமாக இந்த வயது பிரிவினருக்கான மருந்து வந்ததும் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது, பெருந்துறை அரசு மருத்துவமனையில் 440, ஈரோடு மாநகராட்சியில் 1720, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3070, மாவட்ட தடுப்பூசி கிடங்கில் 4170 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வத்துடன் பொதுமக்கள் வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு காந்திஜி சாலை, அகத்தியர் நகர், வீரப்பன்சத்திரம், ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம், பிராமண பெரிய அக்ரஹாரம், சூரியம்பாளையம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று தலா 100 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதற்காக காலையில் டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 100 பேருக்குதான் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு 500 பேர் வரை திரண்டனர். தடுப்பூசிக்கு டோக்கன் கிடைக்காதவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீஸார் தலையிட்டு பொதுமக்களை சமாதானம் செய்தனர்.