Regional02

பால் விற்பனை மையத்தில் ஐஸ்கிரீம் விற்ற கடைக்கு `சீல் ' :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் அரூரில் ஊரடங்கு விதிகளை மீறி ஐஸ்கிரீம் விற்ற கடைக்கு போலீஸார் சீல் வைத்தனர்.

கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மாநிலம் முழுக்க முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதேநேரம், மருத்துவமனை, மருந்தகங்கள், பால் கடைகள் போன்றவை இயங்க மட்டும் அனுமதி அளித்துள்ளது. இதர கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்க அரசு தடை விதித்துள்ளது. இதை உறுதி செய்ய தொடர்ந்து மாவட்டம் முழுக்க வருவாய் மற்றும் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரூர் திரு.வி.க நகரில் செயல்படும் தனியார் பால் நிறுவன விற்பனை மையம் ஒன்றில் ஊரடங்கு விதிகளை மீறி ஐஸ்கிரீம், கேக் போன்ற பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இதனால், இந்தக் கடை முன்பு சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் குவிந்துள்ளனர். அப்பகுதியில் ரோந்து சென்ற அரூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரசாத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு வந்த ஜெயபிரசாத் குழுவினர் பால் விற்பனை மையத்துக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இதைமீறி, பால் விற்பனை மையங்களில் இதர பொருட்களை விற்பனை செய்து கரோனா தொற்று பரவலுக்கு காரணமாக யாரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT