திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தின் சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. கடந்த 4 மாதங்களில் மட்டும் 28 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட குழந்தைகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
குழந்தை திருமணத்தால் கருச்சிதைவு, தாய்-சேய் மரணம், ரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பள்ளிப் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைபட்டு, தன்னம்பிக்கை குறையும். மேலும், குடும்ப பிரச்சினைகள் ஏற்பட்டு, தற்கொலை செய்யும் நிலையும் உருவாகும். குழந்தை திருமண தடை சட்டத்தின்படி, 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
18 வயதுக்கு உட்பட்ட பெண், 21 வயதுக்கு உட்பட்ட ஆணைத் திருமணம் செய்பவர் குற்றவாளி ஆவார். மேலும், திருமணத்தை நடத்தியவர், நடத்தத் தூண்டியவர், திருமணத்தில் பங்கேற்றவர்கள், பத்திரிகை அச்சடிக்கும் அச்சக உரிமையாளர், திருமண மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவர்.
குழந்தை திருமணங்கள் தொடர்பான தகவல்களை சைல்டு லைனின் இலவச தொலைபேசி எண் 1098, பெண்களுக்கான உதவி தொலைபேசி எண் 181, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 044-29896049, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண் 044-27665595 ஆகியவற்றுக்குத் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.