Regional02

தொற்று குறைவதால் காலியான 400 ஆக்சிஜன் படுக்கைகள் - புதுச்சேரி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பு : ஆளுநர் தமிழிசை அதிகாரிகளுடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கரோனா தொற்று குறைவதால் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கான கரோனா ஆய்வுக்கூட்டத்தை காணொலி மூலமாக தெலங்கானாவிலிருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று மாலை நடத்தினார். இக்கூட்டத்தில் தலைமைச்செயலர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறைச்செயலர் டாக்டர் அருண், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறிய தாவது:

புதுச்சேரியில் கரோனா தொற்றும், இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து வருகிறது. மருத்துவமனைகளில் 400ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருக்கின்றன. தற்போது தடுப்பூசி, கருப்பு பூஞ்சை நோய், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் 97 சத நோயாளிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் என்பதால் கரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த வேண் டும். தடுப்பூசி போட்டால் மட்டுமே மூன்றாவது அலையை எதிர்கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு விழாமல் இருக்க புதுச்சேரிக்கு தேவையான தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு புதுச்சேரியில் நல்ல பலனை தந்துள்ளது. மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT