தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜூதீன், தமிழக முதல்வர் மற்றும் மீன்வளத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சார்ந்த பகுதிகளில், ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல், படகுகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்று 2-வது அலை பரவலில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உதிரிபாக கடைகள் மற்றும் வலை உபகரணங்கள் விற்பனைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால், படகுகளுக்கு தேவையான உதிரிபாகங்கள், வலை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், படகுகளை சீரமைக்கும் தொழிலாளர்களும் வரவில்லை. எனவே, 75 சதவீத படகுகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
ஜூன் 7 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதன் பிறகு தளர்வுகள் அறிவித்தால், படகுகள் பராமரிப்பில் சம்பந்தப்பட்டுள்ள கடைகளையும் திறக்கும் வகையில் தளர்வுகளை அறிவித்து, படகுகளை சீரமைத்து தொழிலுக்கு அனுப்ப உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
மேலும், ஜூன் 15-ம் தேதி தடைக்காலம் முடிந்து படகுகளை தொழிலுக்கு எடுத்துச் சென்றால், மீன்பிடித்து திரும்பும்போது, மீன்சந்தை பகுதியில் மீனவர்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளியின்றி கூடி, கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஜூலை 1-க்கு பிறகு படகுகளை தொழிலுக்கு எடுத்தால் நல்லது என பெரும்பாலான மீனவர்கள் கருதுகின்றனர்.
அதன்படி, மீன்பிடி தடைக்காலத்தை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டால், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.