தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள் என 88 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,32,213 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 28,822 பேர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி கோவிஷீல்டு 360 டோஸ்களும், கோவாக்சின் 820 டோஸ்களும் மட்டுமே கையிருப்பில் இருந்தன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று முன்தினமே காலியாகி விட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி அறவே இல்லை. இதனால் நேற்று வந்த யாருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படவில்லை. 2 மையங்களில் மட்டும் சுமார் 400 டோஸ் கோவாக்சின் மட்டுமே நேற்று போடப்பட்டது.
வெளிநாடுகளுக்கு செல்வோர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நேற்று பலர் கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்காக வந்தனர். ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேநிலை தான் மாவட்டம் முழுவதும் நேற்று காணப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த தடுப்பூசிகளை ஜூன் 2 மற்றும் 3 - ம் தேதிகளில் போடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்பட முழுமையாக போட்டு முடித்துள்ளோம். தற்போது தடுப்பூசி கையிருப்பில் இல்லை. விரைவில் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கிறோம். வந்தவுடன் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்’’ என்றனர்.