Regional01

ஈரோடு முதியோர் இல்லத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

ஈரோடு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து, அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு திண்டலில் செயல்படும் லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த இல்லத்தில் தங்கியிருந்த ஆண்டாள் என்ற மூதாட்டி கரோனா தொற்றால் இறந்த நிலையில், முதியோர் இல்லத்தில் உள்ள 76 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 36 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 40 முதியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். முதியோர் இல்லத்தில் கரோனா பரவலையடுத்து, ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தனர்.

SCROLL FOR NEXT