திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் கூறியிருப்பதாவது:
மண் மாதிரி எடுக்க இதுவே சிறந்த தருணம். விவசாயிகள் அறுவடை முடிந்த தங்கள் வயலில், அடுத்த உழவுக்கு முன்னதாக மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும்போது வயலின் வரப்பு ஓரங்கள், வாய்க்கால் ஓரம், மர நிழல், ஈரமான பகுதிகள் மற்றும் உரம் குவித்த இடங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் ‘A’ வடிவ குழிகள் ½ அடி முதல் ¾ அடி ஆழத்துக்கு எடுக்கவும். அந்த குழிகளில் பக்கவாட்டில் உள்ள மண்ணை அரை அங்குலத்துக்கு மேலிருந்து கீழாக சுரண்ட வேண்டும். இவ்வாறு சேகரித்த மண்ணை நிழலில் உலர்த்தி கல், வேர் முதலான பொருட்களை தவிர்த்து, பின் அதை தூளாக்கி பகுதி பிரித்தல் முறையில் அரை கிலோ அளவுக்கு மண்ணை சேகரிக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை துணிப்பையில் இட்டு அதில் விவசாயியின் பெயர், முகவரி, புல எண், பாசன விவரம், பயிர் சாகுபடி விவரம் ஆகியவற்றுடன் தங்களது பகுதி உதவி வேளா ண்மை அலுவலரிடம் வழங்கவும்.
மண் பரிசோதனை செய்வதால் பயிரின் தேவையறிந்து உரமிட்டு உரச் செலவை குறைக்கலாம். மண்ணில் ஏதேனும் சத்துக் குறைபாடு இருந்தால் அதனை கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம். மண் மாதிரி எடுத்தல் மற்றும் மண் பரிசோதனை தொடர்பான சந்தேகங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம். மண்ணின் வளம் அறிந்து உரமிட்டு மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை செய்ய முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.