ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 1100 வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படுள்ள ஊரடங்கை அமல்படுத்தும் வகையில், மாவட்ட எல்லையில் 13 நிலையான சோதனைச் சாவடிகள் மற்றும் 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநில எல்லைப் பகுதிகள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாவட்ட எல்லைகளில் உள்ள பிரதான சோதனைச் சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பு தொடரும் நிலையில், இணைப்புச்சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிவோர் மீது வழக்குப்பதிவு செய்யும் போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். சில இடங்களில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.
நேற்று முன் தினம் முகக்கவசம் அணியாத 300 பேருக்கு தலா ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றிய 1072 இருசக்கர வாகனங்களையும், 28 நான்கு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.