Regional01

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி குடியிருப்புவாசிகள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிப்பு :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை எனக்கூறி குடியிருப்புவாசிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 951 பேர் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 131 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, இதில் 579 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளைச் சேர்ந்தோர் வெளியிடங்களுக்கு செல்லவும், வெளியாட்கள் அப்பகுதிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனிமைப்படுத் தப்பட்ட பகுதிகளில் வசிப்போர், தங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி பாரதிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிமக்கள் வெளியேற முடியாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் அத்தியாவசியப் பொருட்களான பால் காய்கறிகள் போன்ற வாகனங்கள் அந்த தெருவிற்கு உள்ளே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், அங்கு காவல்பணியில் இருந்த காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT