கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து தினந்தோறும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரோடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
ஈரோட்டில் கரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக 50 தன்னார்வலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழக அரசின் பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை, பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவது இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் நோய் தொற்றாளர்களுக்கு உதவுவதற்காக, ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். அவர் மூலமாக பலருக்கும் தொற்று பரவல் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை குறித்தும் நோயாளிகளிடம் அதிருப்தி நிலவுகிறது.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என முதல்வர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், நாள்தோறும் எங்கு தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. பொதுமக்கள் தடுப்பூசியைத் தேடி அலைவதைத் தடுக்கும் வகையில், எந்தெந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது, அதற்கான முன்பதிவை எப்படி செய்வது, ஒவ்வொரு நாளும் டோக்கன் எத்தனை மணிக்கு விநியோகிக்கப்படுகிறது என்பதை செய்தித்தாள்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு தினமும் வெளியிட வேண்டும்.
அதேபோல், அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனை முடிவு கிடைக்க மூன்று முதல் ஐந்து நாட்களாகிறது. இதனைத் தவிர்த்து ஒரே நாளில் முடிவு கிடைக்குமாயின், தொற்று பரவலை வெகுவாகத் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.