தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தால் ஏழை, எளிய மக்கள் பலர்வேலைக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நன்மைக்காக பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் இதை வழங்கும் வகையில்,
ஒரு நாளைக்கு 200 பேருக்கு மட்டுமே இந்தப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டோக்கன்கள் வரும் 4-ம் தேதி வரை வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளின்படி பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.