'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெறப்பட்ட 1,965 மனுக்களுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சார கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திமுக ஆட்சி அமைந்ததும், அந்த மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என, அவர் அறிவித்திருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தை தொடங்கினார். அதற்கு சிறப்பு அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பின்னர் அந்த மனுக்கள் மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் தூத்துக்குடியில் 400 மனுக்களும், திருச்செந்தூர் 345, உடன்குடி 13, ஆறுமுகநேரி 8, ஸ்ரீவைகுண்டம் 130, சாத்தான்குளம் 25, கோவில்பட்டி 507, விளாத்திகுளம் 316, ஓட்டப்பிடாரம் 292, கயத்தாறு 26, கருங்குளம் 11, புதூர் 2 என, மொத்தம் 1,965 மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களில் உள்ள கோரிக்கைகள் அனைத்துக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் 12 வட்டாரங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர். அப்போது, அனைத்து மனுக்களையும் உடனடியாக விசாரித்து, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறைக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என, ஆட்சியர் அறிவுறுத்தினார்.