Regional02

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் - 10,762 மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 'உங்கள்தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது:

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும். மனுக்களின் கோரிக்கைகள் குறித்த ஒதுக்கீடு இந்த ஆண்டுக்கு முடிந்திருப்பினும், கூடுதலாக ஒதுக்கீடு பெற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பித்த அனைத்து மக்களும் நன்மைபெறும் வகையில் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பேசும்போது, “ உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த 10,762 மனுக்கள் துறை வாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு துறை அலுவலர்களும் இந்த மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள, பொறுப்பு அலுவலரை நியமித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையின் மீது மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து மனுக்களின் மீதும் ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுத்து, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு கண்ட முதல் மாவட்டமாக தூத்துக்குடி திகழ வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT