தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வாகனங்களில் திருநெல்வேலிக்கு வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோருக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என்று போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பாளையங்கோட்டையில் வி.எம்.சத்திரம் எல்லையில் உள்ள சோதனைச்சாவடி வழியாக, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் பகுதிகளில் இருந்து தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள காவல்துறையினர் நேற்று நடவடிக்கை எடுத்தனர்.
மாநகரில் சந்திப்பு மேம்பாலம், பாளையங்கோட்டை, டவுன், பேட்டை, தச்சநல்லூர், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தேவையின்றி வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று அபராதம் செலுத்திய பின்னர்தான், வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.