தனியார் மருத்துவமனைகளில் இலவச காப்பீட்டுத் திட்டம் அமலாவதை கண்காணிப்பதுடன், புகார் மையம் உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு அலுவலர் சி.சமயமூர்த்தியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் அளித்த கடிதத்தில், "திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் தினசரி பரிசோதனையை குறைந்தபட்சம் 10 ஆயிரம் வரை அதிகப்படுத்த வேண்டும்.
மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் வசதியை இரண்டு மடங்கு அதிகப்படுத்த வேண்டும், பரிசோதனை முடிவை24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். இதர மாவட்ட மருத்துவ கல்லூரிகளில் இருந்து இருப்பிட மருத்துவர்கள், முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்களை தற்காலிகமாக பயன்படுத்தி, பற்றாக்குறையை போக்க வேண்டும்.
அமராவதி சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் பிளாண்ட் மூலம், சுலபமாக ஆக்சிஜன் தயாரித்து புறநகர் பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். ஊத்துக்குளி, அவிநாசி,காங்கயம் உள்ளிட்ட வட்டார மருத்துவமனைகளில் வென்டிலேட்டர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டு போதுமான அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இலவசகாப்பீட்டுத் திட்டம் அமலாவதை கண்காணிப்பதுடன், புகார் மையம் உருவாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.