Regional01

சேலம் மாவட்டத்தில் - கரோனா நோயாளிகளை கண்காணிக்க 354 பேர் கொண்ட குழு அமைப்பு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களையும், சிகிச்சை மையங்களில் உள்ளவர்களையும் கண்காணிக்க 354 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க 32 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றிற்கு 32 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கட்டுப்பாட்டில் 177 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு அலுவலர்கள் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சை, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்தல், முழு ஊரடங்கை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 சட்டப்பேரவை தொகுதிகளின் பொறுப்பு அலுவலர்கள், ஊரடங்கை கண்காணித்தல், வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணித்து, மருத்துவ பரிசோதனை, தேவையான உதவிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும், கரோனா சிகிச்சை மையங்களில் உள்ளவர்களையும் கண்காணிக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வீடுகளில் தனி அறை மற்றும் கழிப்பறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்பதை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்ய வேண்டும். காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஆட்சியர் கார்மேகம், மாவட்ட பொறுப்பு அலுவலர் முருகேசன், எம்பி பார்த்திபன், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன்,மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT