உலக கோப்பை சதுரங்க (செஸ்) போட்டி ரஷ்யாவில் வருகிற ஜூலை 10-ம் தேதி முதல் ஆக. 3 வரை நடக்கிறது. இப்போட்டிக்கான தகுதி மற்றும் தேர்வு போட்டியை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு நடத்தியது. கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை காணொலி வாயிலாக போட்டிகள் நடத்தப்பட்டன. கரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக வீரர்கள் அவரவர் வீடுகளில் அமர்ந்து சர்வதேச நடுவர்கள் மேற்பார்வையில் போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்தியாவின் சார்பில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட மாஸ்டர் பி.இனியன் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர். இதில், கிராண்ட் மாஸ்டர் இனியன், கிராண்ட் மாஸ்டர்கள் அதிபன், நாராயணன், குகேஷ், விஷ்ணு பிரசன்னா உட்பட 12 வீரர்களுடன் விளையாடி வெற்றி பெற்றார். கிராண்ட் மாஸ்டர் சேதுராமனை இனியன் டிரா செய்தார். இதன் மூலம் 12.5 புள்ளிகள் பெற்று போட்டியில் முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் ரஷ்ய உலக கோப்பை 2021 போட்டியில் இந்தியா சார்பில் பி.இனியன் பங்கேற்று விளையாட உள்ளார்.