கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாருதி நகரைச் சேர்ந்தவர் தவுலத் பாஷா. இவரது மனைவி ஹாகின். இவர்களுடைய மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதால், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தங்கியிருந்து மகனை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூரில் இருந்து ஹாகினின் சகோதரி ரேஷ்மா (26), சகோதரர் சார்யா அகமது (25) ஆகியோர் வெள்ளங்குளிக்கு வந்தனர். இருவரும் உறவினர் களுடன் நேற்று முன்தினம் திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ரேஷ்மா, தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த சார்யா அகமது, அக்காவை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரும் ஆற்றில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புப் படையினர் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் ரேஷ்மா சடலத்தை மீட்டனர்.
இரவு நீண்ட நேரமாகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக தேடுதல் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு, சார்யா அகமது சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக வீரவநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.