தங்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சமையல் எரிவாயு சிலிண்டருடன் வந்த எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்க நிர்வாகிகள். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக் கோரி - சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக தொழிலாளர்கள் மனு :

செய்திப்பிரிவு

தங்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக் கோரி, தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சங்க மாநில துணைச் செயலாளர் பிரபு, மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் செந்தில், பொருளாளர் சிவ மணிகண்டன் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்த தொழிலாளர்கள் சேலம் ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் சென்று விநியோகம் செய்கின்றனர். தொழிலாளர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, எங்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும்.

முறையான மாத ஊதியம், இஎஸ்ஐ, ஈபிஎப் போன்ற சலுகைகள் வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பால் உற்பத்தியாளர்கள்

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறும்போது, “கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், விடுமுறையின்றி பணிபுரியும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்களை அரசு முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு மனு அனுப்பியுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT