தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் 2-வது அலகில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். 
FrontPg

ஸ்டெர்லைட் 2-வது அலகில் சோதனை ஓட்டம் : முதல் அலகில் இதுவரை 329 டன் ஆக்சிஜன் உற்பத்தி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய 2-வது அலகில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. முதலாவது அலகில் இதுவரை 329 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன்உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

நிலையத்தின் முதல் அலகில் கடந்த 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆனால், மறுநாளே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன்பின் 6 நாட்கள் உற்பத்தி நடைபெறவில்லை. தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, கடந்த 19-ம் தேதி மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

நேற்று மாலை 3 மணி நிலவரப்படி மொத்தம் 329.37 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 316.2 டன் ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்றுமட்டும் 24.6 டன் ஆக்சிஜன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள 2-வது அலகிலும் சோதனை ஓட்டம் நேற்று மாலை தொடங்கியது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் 2-வது அலகிலும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2 அலகுகளிலும் முழு அளவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கினால் தினசரி சராசரியாக 70 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT