திருச்சுழி அருகே வீரசோழனில் 100 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு. 
Regional02

100 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் : திருச்சுழி அருகே அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழனில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்ரமணியன் முன்னிலையில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆக்சிஜன் சிலிண்டர் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை இருப்பு வைக்குமாறும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தேவைக்கேற்ப பணியமர்த்தவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். கிராமங்களில் வீட்டில் தனிமைப்படுத்துவதைக் குறைத்து கரோனா சிகிச்சை மையத்தில் பாதிக்கப்பட்டோரை அனுமதித்துத் தேவையான சிகிச்சைகள் அளிக்க அறிவுறுத்தினார். தடுப்பூசி முகாம் தனியாக நடத்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர், திருச்சுழி அரசு மருத்துவமனைக்குச் சென்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறை, அதன் பட்டியல் குறித்து கேட்டறிந்தார். தரமான உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் முக்கிய கவனம் செலுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT