பெருந்துறை அரசு மருத்துவ மனையில் அமைக்கப்படும் கூடுதல் படுக்கை வசதிகள் கொண்ட வளாகத்திற்கு தடையற்ற மின்சாரம் வழங்க இரு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இம்மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள மின்சார கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின் கட்டமைப்பை ஆய்வு செய்ததில், குறைந்த காலத்தில் ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை மேம்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லாத நிலை உள்ளது.
இதையடுத்து புதிய படுக்கைகள் அமையப் பெற்றுள்ள இடத்திற்கு பாதுகாப்பான தூரத்தில், புதியதாக இரண்டு 250 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றிகள், 5 மின்கம்பங்கள் 14 மணி நேரத்திற்குள்ளாக அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைக்கான கட்டமைப்பு பகுதியில், தற்போது பயன்பாட்டில் உள்ள 500 கேவிஏ மின் மாற்றி யுடன், மின்வாரிய இருப்பில் இருந்தஒரு 500 கேவிஏ மின்மாற்றி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனைக்கு கருமாண்டிசெல்லிபாளையம் துணை மின்நிலையத்திலிருந்து, தனியாக மின்பாதை மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. கூடுதல் மாற்று ஏற்பாடாக, சிப்காட் துணை மின்நிலையத்திலிருந்து இரண்டு மின்பாதைகள் வழியாக மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும், தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.இந்திராணி தெரிவித்துள்ளார்.