சேலம் மாவட்டத்தில் சில்லரை வியாபாரிகள் சிறிய வாகனத்தில் மளிகை பொருட்களை எடுத்துச் சென்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (31-ம் தேதி) தொடங்கி வரும் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். ‘செவ்வாய்பேட்டையில் உள்ள மொத்த வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சில்லரை வணிகர்களுக்கு மட்டும் மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம். மொத்த வணிகர்கள் நுகர்வோருக்கு நேரிடையாக விற்பனை செய்யக்கூடாது.
சில்லறை வியாபாரிகள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சிறிய வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டும். இவற்றை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யலாம்.
சில்லரை வியாபாரிகள் கடைகளை திறந்து விற்பனை செய்யக்கூடாது. மேலும், அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் அனைவரும் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்’ என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.