Regional01

ஆய்வுக்கூட பணியாளர்களுக்கு தொற்று - சேலத்தில் கரோனா பரிசோதனை முடிவு அறிவிப்பதில் தாமதம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் ஆய்வகஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள தால், சேலம் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தெரிகிறது என சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகள்தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 486 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதால் நுரையீரல் பாதிப்பு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படுவது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்கள் சந்தேகம் வந்தவுடன் சிகிச்சை பெற தொடங்கிவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது.

சேலம் கரோனா பரிசோதனை கூடத்தில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனாபரிசோதனை முடிவுகள் அறிவிப் பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக தெரிகிறது. மாநில அளவில் தினமும் 2 லட்சம் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில், 90 சதவீதம் முடிவுகளை விரைந்து அறிவிக்கி றோம். ஆய்வகங்களில் பணிபுரி வோருக்கு ஏற்படும் கரோனா தொற்று உள்ளிட்ட பல காரணங் களால் 10 சதவீதம் ஆய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. கரோனா தொற்றின் 3-வது மற்றும் 4-வது அலையை எதிர்கொள்ள மருத்துவ வல்லுநர் களுடன் ஆலோசனை மேற் கொண்டு வருகிறோம். மேற்கு மாவட்டங்களில் சில தொழில் களுக்கு அனுமதி வழங்கியதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்படாத பணிகளும் நடைபெற்று வந்தது.

இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது. இரு மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகம் பேர் பங்கேற்பதால், தொற்று பரவல் அதிகமாகிறது. சேலத்தில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளன. இதுபோன்ற மருத்துவமனைகளை மூடும் சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், சேலம் இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

ஆய்வின்போது, சேலம் ஆட்சியர் கார்மேகம், அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்யமூர்த்தி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி, செல்வகுமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT