தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் தினசரி பாதிப்பு 600 முதல் 700 பேர் என்ற நிலையில் இருக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆங்காங்கே சிறப்பு முகாம்களை நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த பணியை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா என, தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைவருக்கும் சோதனை செய்கின்றனர். மேலும், வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், யாரெல்லாம் தடுப்பூசி போட்டுள்ளனர் என்ற விவரத்தையும் கேட்டு பதிவு செய்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களை உடனே தடுப்பூசி போட அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களை தடுப்பூசி போட வலியுறுத்துகின்றனர்.