கரோனா நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை மூலம் ஆக்சிஜன் அளவை சீராக வைக்க முடியும். இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை குறையும். எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மகளிர் மருத்துவப் பிரிவு மாநிலச் செயலாளர் வினோதினி கூறியதாவது:
கரோனா நோயாளிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆக்சிஜன் சிலிண்டரின் தேவையை கணிசமாக குறைக்க முடியும். கரோனா பாதிப்பின் ஆரம்ப நிலையில் நுரையீரலில் சளி உறைய ஆரம்பித்து, வெளியே வரமுடியாத நிலை உருவாவதால், உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இந்த ஆரம்ப நிலையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் உறைந்த சளியை இலகுவாக்கி வெளியேற்ற முடியும். இதன் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும். நுரையீரல் பாதிப்பும் குறையும்.
மேலும், பிசியோதெரபி சிகிச்சை மூலம் உடல் சோர்வை நீக்கி, உடல் இயக்கத்தை சீராக வைக்க முடியும். இதனால் நோயாளிகள் மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை எடுக்கும் நாட்களை குறைக்க முடியும். எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிசியோதெரபி மருத்துவர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
ஏற்கெனவே அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் தேசிய நல்வாழ்வு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் 400 பிசியோதெரபி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அனைத்து தாலுகா மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிசியோதெரபி மருத்துவர்களை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் நியமித்து, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கரை ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.