திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 9 நகர்ப்புற சுகாதார மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 35 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, சராசரியாக ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 560 களப்பணியாளர்கள், கிருமிநாசினி தெளிப்பு பணியில் 101 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 10 கிருமி நாசினி தெளிப்பு வாகனங்கள், 68 கிருமி நாசினி தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தூய்மை இந்தியா இயக்க பணியாளர்கள் அனைவரும் களமிறக்கப்பட்டனர். 55 வார்டுகளிலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. கட்டுப்பாட்டு பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். தொற்று பாதித்த வீடுகளுக்கு தினசரி வீட்டை தொற்று நீக்கம் செய்யும் வகையில் லைசால் வழங்கப்பட்டது. பாரசிட்டமால், மல்டி விட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் பாக்கெட் ஆகியவை தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு டெலி மெடிசின் திட்டத்தில் தொடர்பு கொண்டு நோய் அறிகுறிகள் கேட்டறியப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தினமும் 27 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 36,126 பேரு க்கு முதல் தவணை, 17,870 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
காய்கறி வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. விதிகளை மீறியதால் இதுவரை ரூ.5.31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட இந்த தடுப்பு நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. ஏப்ரல் இறுதி, மே மாத தொடக்கத்தில் நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 65 என்ற இரட்டை இலக்கத்துக்கு வந்துள்ளது என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.