கடலூர் அருகே கூத்தப்பாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமைமாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்டத்தில் தினசரி 140 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்து நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை அனுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. காய்ச்சல் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருவதால் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
ஊரடங்கு நாட்களில் பொதுமக்களுக்கு சிரமமின்றி காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப் பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள ஊரடங்கை கடைபிடித்து கரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றார்.