சிவகங்கை நகர் சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி எடுத்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் ஒரே இடத்தில் நடப்பதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை நகர் சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்படுகிறது. இதனால் கரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள் இங்கு வருகின்றனர். இதே சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. தற்போது 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அதிக கூட்டம் வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் இங்கு செலுத்தப்படுகிறது. சுகாதார நிலையம் குறுகிய இடமாக இருப்பதால் இடநெருக்கடியாக உள்ளது. மேலும் சளி மாதிரி எடுத்தலும், தடுப்பூசி செலுத்துவதும் ஒரே இடத்தில் நடப்பதால் மற்றவர்களுக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி கூறுகையில், நகராட்சி ஆணையரிடம் பேசியுள்ளோம். சளி மாதிரி எடுப்பதற்கு வேறு இடம் ஒதுக்குவதாக கூறியுள்ளார். இடம் கிடைக்காவிட்டால் காஞ்சிரங்காலில் சளி மாதிரி எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.