திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர் பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் இரும்புத் தாது அளவைக் குறைக்க ரூ.4 கோடியில் புதிய காற்று உலர்த்தி நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் மற்றும் ரங்கம் கோட்ட அலுவலகங்களில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு பெட்டகம் வழங்கல் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத அளவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதைசாக்கடைத் திட்டம் இல்லாத இடங்களில் விரைவில் நடைமுறைப்படுத்தவும், பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் அவற்றை துரிதப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலெக்டர் வெல் எண்.1 மற்றும் 2-ல் ‘ஏரேட்டர்கள்’ நிறுவப்பட்டு மாநகராட்சியில் உள்ள 55 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு செல்லும் குடிநீரில் இரும்புத் தாது அளவு குறைக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் வெல் எண்.3-லிருந்து உறையூர் மற்றும் தில்லைநகர் பகுதிகளில் உள்ள 10 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு உந்தப்படும் குடிநீரில் இரும்புத்தாது அளவை குறைத்து அனுமதிக்கப்பட்ட அளவில் குடிநீர் வழங்குவதற்காக புதிதாக காற்று உலர்த்தி நிறுவுவதற்கு ரூ.4 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் நோய் பரவலை மேலும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
முன்னதாக ரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள பொது தரைமட்ட கிணறு வளாகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, ரங்கம் எம்எல்ஏ மு.பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.