Regional01

உள்ளாட்சி அமைப்பின் அனுமதியுடன் - மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம் :

செய்திப்பிரிவு

உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ளதுபோல காய்கறி மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இந்தநிலையில், மளிகைப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் மூலம் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு அனுமதி அளித்துள்ளது. வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள், அதற்கான அனுமதிச்சீட்டை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

மளிகைப் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், மாநகராட்சி உதவி ஆணையரிடம் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வாகனங்களில் மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

மாநகராட்சி பகுதி முழுமைக்கும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய விரும்பும் பெரு நிறுவனங்கள், மாநகராட்சி அலுவலக உதவி ஆணையரை (வருவாய்) அணுகி அனுமதி பெறலாம்.

SCROLL FOR NEXT