பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது. மாணவர்களுக்கு நேரடியாகவே தேர்வு நடக்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 18 முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. எனவே,சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி பிளஸ் 2 தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்தத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது. வழக்கம்போல மாணவர்களுக்கு நேரடியாகவே தேர்வு நடைபெறும்.
அண்மையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள், துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில், முதல்வர்அறிவுறுத்தியபடி நானும்,பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலரும் பல்வேறு கருத்துகளை நாங்கள் முன்வைத்தோம். அனைத்து மாநிலங்களும் சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களை மனதில் வைத்து பேசிய நிலையில், நாங்கள் மட்டும் மாநில பாடத் திட்ட மாணவர்கள் குறித்து பேசினோம். அந்தக் கூட்டத்தில்பிளஸ் 2 தேர்வு தேதியை நாங்களே (மாநில அரசு) முடிவு செய்து கொள்வோம் என்று கூறினோம்.
சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இன்றுகூட (நேற்று) ஒரு பள்ளி மீது புகார் வந்து, அந்தப் பள்ளிக்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. யார் தவறுசெய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
விசாகா கமிட்டி
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பிளஸ் 2 பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களான இயற்பியல், உயிரியல், கணினி அறிவியல் பிரிவுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.