Regional01

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் - நீண்ட நேரம் காத்திருந்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம் :

செய்திப்பிரிவு

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால், பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்களிடையே அச்சம் ஏற் பட்டுள்ளது. இதனால், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற் பட்டவர்கள் என்ற அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருவதால், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வருவோர் எண்ணிக்கை சேலத்தில் அதிகரித்துள்ளது.

சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு நேற்று காலை முதலே மக்கள் ஏராளமானோர் காத்து நின்றனர். நேரம் அதிகரித்ததும், தடுப்பூசி போட வந்தவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் கூடியது. இந்நிலையில், தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெறுவதாகக்கூறி, பொதுமக்கள் சுகாதார நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் கூறுகையில், ‘தடுப்பூசி போடுவதற்காக, காலை 7 மணிக்கே வந்துவிட்டோம். ஆனால், சுகாதாரத்துறையினர் 10 மணிக்குத் தான் வந்தனர்.

ஒரே இடத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதால், சமூக இடைவெளி இல்லாமல் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிற்க வேண்டியுள்ளது. எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதனிடையே, மாநகராட்சி சுகாதார நிலைய அதிகாரிகள் முற்றுகை யிடப்பட்டதை அறிந்து, பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அஸ்தம்பட்டி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

SCROLL FOR NEXT