பொற்செழியன் 
Regional02

அங்கீகாரமின்றி ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்த ‘சாப்பாட்டு ராமன்’கைது :

செய்திப்பிரிவு

உணவு செரிமான பிரச்சினைக்கு ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்ததாக ‘சாப்பாட்டு ராமன்’ எனும் பொறியாளர் பொற்செழியனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் பொற்செழியன். இவர் ‘சாப்பாட்டு ராமன்’ எனும் பெயரில் உணவு தொடர்பான பல்வேறு தகவல்களை வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவ்வப்போது ஏதேனும் ஒரு நபருடன் சேர்ந்து அசைவ உணவுகளை சமைத்து, தானே உண்டு யு டியூப்பில் பதிவேற்றுவதுண்டு. இதன்மூலம் 10 லட்சத்துக்கும் அதிகமான தொடர்பாளர்களை தன்வசம் வைத்துள்ளார்.

மாற்று வழி மருத்துவம் படித்த இவர், அதிகப்படியான உணவுகள் உண்ணும்போது, ஏற்படக்கூடிய செரிமான கோளாறுக்கு இயற்கை மருந்துகள் என சில மருந்துகளை வலைதளத்தில் அறிமுகப்படுத்தி வந்தார். இதற்கிடையே செரிமானச் சிக்கலுக்கு, இவர் அலோபதி மருந்துகளையும் பரிந்துரைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத் துறையினர் கூகையூரில் இவர் நடத்தி வந்த கிளினிக்கை நேற்று காலை சோதனையிட்டனர். அங்கு கரோனா நோய்க்கான பரிந்துரை மருந்துகளும், மேலும் இதர நோய்களுக்கான அலோபதி மருந்துகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது கிளினிக்கை சீல் வைத்த சுகாதாரத் துறையினர், பொற்செழியன் மீது கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT